காதல் தோல்வியால் சினிமா கேமராமேன் தற்கொலை
காதல் தோல்வியால் சினிமா கேமராமேன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வடபழனி,
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 36). இவர், சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் தனது நண்பர்களுடன் தங்கி, சினிமா துறையில் கேமராமேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது நண்பர் ஒருவர், படப்பிடிப்புக்கு சென்று விட்டு அறைக்கு வந்து பார்த்தபோது ராஜூவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த வடபழனி போலீசார், ராஜீவ் காந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது
மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சினிமா துறையில் கேமராமேனனுக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்த ராஜூவ் காந்தி, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அவர் கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு அறையிலேயே இருந்துள்ளார். அவரது நண்பர்கள் மட்டும் வேலைக்கு சென்று வந்தனர். இந்தநிலையில் தனியாக இருந்த ராஜீவ் காந்்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் அவரது அறையில் ராஜீவ் காந்தி எழுதிய கடிதம் ஒன்றும் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், "எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. காதல் பிரச்சினையால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த முடிவை எடுத்துள்ளேன்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.