சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தல்; ரஜினி, கமல் ஓட்டு போட்டனர்
சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஓட்டுபோட்டனர்.
சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பதவி காலம் முடிவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னை அடையாறில் உள்ள ஜானகி எம்.ஜி.ஆர் கல்லூரியில் நேற்று நடந்தது.
இதில் தலைவர் பதவிக்கு முரளி ராமநாராயணன், மன்னன் ஆகியோர் போட்டியிட்டனர். 2 துணைத்தலைவர் பதவிக்கு 6 பேரும், 2 செயலாளர் பதவிகளுக்கு 6 பேரும், ஒரு இணைச்செயலாளர் பதவிக்கு 4 பேரும், பொருளாளர் பதவிக்கு 4 பேரும், 26 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 77 பேரும் போட்டியிட்டனர்.
ரஜினி-கமல்
ஓட்டுப்பதிவு காலை தொடங்கியது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நேரில் வந்து ஓட்டு போட்டனர். மேலும் நடிகர்கள் ஆர்யா, ராமராஜன், சசிக்குமார், விஷ்ணு விஷால், எஸ்.வி.சேகர், ராதாரவி, சின்னி ஜெயந்த், மோகன், டெல்லி கணேஷ், அருண் பாண்டியன், காந்த், விக்னேஷ், பொன்னம்பலம், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, தயாரிப்பாளர்கள் கேயார், எஸ்.ஏ.சந்திரசேகர், டைரக்டர்கள் டி.ராஜேந்தர், ஆர்.கே.செல்வமணி, நாஞ்சில் அன்பழகன், சித்ரா ல்லட்சுமணன் மற்றும் ஞானவேல் ராஜா, சத்யஜோதி தியாகராஜன், ஜாக்குவார் தங்கம், விஜயமுரளி உள்ளிட்ட பலர் ஓட்டு போட்டனர்.
மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. மொத்தம் உள்ள 1,406 ஓட்டுகளில் 1,111 ஓட்டுகள் பதிவானது. நடிகர் ராஜ்கிரண் 5 மணிக்கு மேல் வந்ததால் ஓட்டுபோட அனுமதிக்கவில்லை.
ஓட்டு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) காலை நடக்கிறது.