பாம்பை காட்டி அச்சுறுத்தி பணம் வசூலித்த 'குடிமகன்'
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்க வந்தவர்களை பாம்பை காட்டி மிரட்டி பணம் வசூலித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாம்பை காட்டி பயமுறுத்தல்
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளின் அருகே ஒருவர் சாக்குபையில் சாரை பாம்பு வைத்து, அதனை அவ்வப்போது வெளியே எடுத்து முத்தமிட்டு விளையாடி உள்ளார்.
மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் வாங்க வருபவர்களிடம் பாம்பை காட்டி பயமுறுத்தி பணம் வசூலித்து மதுவாங்கி குடித்து ரகளையில் ஈடுபடுவதாகவும், பணம் கொடுக்காத நபர்கள் மீது பாம்பை விட்டுவிடுவேன் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து 'குடிமகன்'கள் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பாம்பு வைத்திருந்த நபரிடம் விசாரித்தனர். அதில் அவர் வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த பாம்பு பிடிக்கும் பாபு என்கிற ஸ்னேக்பாபு என்று தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் உடனடியாக பாம்புடன் அங்கிருந்து செல்லும்படி அவரிடம் கூறினர். ஆனால் பாபு அங்கிருந்து செல்ல மறுத்தார். மேலும் போலீசார் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கிருந்து நானே சென்றால்தான் உண்டு என்று கூறி அடம்பிடித்தார்.
இதையடுத்து போலீசார் பாபுவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க வந்தவர்களும், அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்தியவர்களும் நிம்மதி அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.