குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x

ராஜபாளையம் அருேக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் கவுன்சிலர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்.

ராஜபாளையம் அருேக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததால் கவுன்சிலர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் வினியோகம்

ராஜபாளையம் நகராட்சியின் 24-வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர், காந்தி நகர் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டு மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் 10 நாட்கள் முதல் 13 நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வினியோகம் செய்யப்பட்ட குடிநீருடன் கழிவுநீர் கலந்து கலங்கிய நிலையில் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால் அந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலரிடம் வாக்குவாதம்

இதுகுறித்து 24-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வலட்சுமிக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் பொது மக்களுக்கு முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்டனர்.

வீட்டில் இருந்து வெளியே வந்த கவுன்சிலரிடம் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே சுகாதார சீர்கேடு காரணமாக பொது மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தினர்.

நடவடிக்கை

இதையடுத்து பொது மக்களை சமாதானப்படுத்திய கவுன்சிலர் செல்வலட்சுமி, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும், உடைப்பு ஏற்பட்ட பகுதியை சரி செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story