வேகத்தடைகள் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


வேகத்தடைகள் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 July 2022 6:29 PM GMT (Updated: 5 July 2022 7:14 PM GMT)

வேகத்தடைகள் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர்

மீன்சுருட்டி:

3 பேர் படுகாயம்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தின் வழியாக விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக இந்த பகுதியில் உள்ள பாண்டியன் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சிதம்பரம்-திருச்சி 2 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள புறவழிச்சாலையில் மண் ஏற்றப்பட்ட லாரி சென்றது. அதேநேரத்தில் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மகன் வீரராகவன்(வயது 18), ராமச்சந்திரன் மகன் ராகுல்காந்தி(21) மற்றும் கலியபெருமாள் மகன் அபின்குமார்(19) ஆகியோர் ஒரு ேமாட்டார் சைக்கிளில், ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.

சாலை மறியல்

அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் வீரராகவன், ராகுல் காந்தி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்படுவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் 2 புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து முத்துசேர்வாமடம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story