பயணிகள் நிழற்குடை கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியல்


பயணிகள் நிழற்குடை கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

கறம்பக்குடி அருகே இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் பயணிகள் நிழற்குடை கட்ட கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

பயணிகள் நிழற்குடை

கறம்பக்குடி அருகே உள்ள துவார் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சுமார் 500-கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த காலனிக்கு எதிரே புதுக்கோட்டை பிரதான சாலையில் இருந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்து இருந்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வசதிக்காக அங்கு மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சாலை மறியல்

இதையடுத்து அப்பகுதியில் அதே இடத்தில் நிழற்குடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நிழற்குடை தங்கள் கடைகளை மறைப்பதாக கூறி அந்த இடத்தில் மீண்டும் நிழற்குடை கட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிழற்குடை அமைக்கும் பணி தடைபட்டது.

இந்நிலையில் இன்று காலை துவார் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிழற்குடை கட்ட கோரி துவாரில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவலறிந்த மழையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story