மின்வாரிய அலுவலர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


மின்வாரிய அலுவலர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x

அரக்கோணம் அருகே மின்வாரிய அலுவலர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணம் அருகே மின்வாரிய அலுவலர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

5 பசுமாடுகள் பலி

மாண்டஸ் புயலால் அரக்கோணம் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் பல பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையிலும், மின் வயர்கள் அறுந்து தரையில் விழுந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரக்கோணம் அருகே காவனூர் நரசிங்கபுரத்தை சேர்ந்த முனியம்மாள், கஸ்தூரி, பொன்னாம்மாள் மற்றும் ஜானகி ஆகியோரின் 5 பசு மாடுகள் நேற்று செம்மந்தாங்கல் ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் வயர்களை மிதித்ததில் 5 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

இதுகுறித்து மின் வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு மின் நிறுத்தம் செய்து 24 மணி நேரமாகியும் அறுந்த மின் வயர்களையும் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்களையும் சீரமைக்க வில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவ்வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார், வருவாய் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சரி செய்வதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும், 5 பசு மாடுகள் பலியான சம்பவம் குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story