ஊட்டியில் பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ஊட்டியில் பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கஸ்தூரி பாய் காலனி
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி கஸ்தூரி பாய் காலனி பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இவர்கள் பல காலமாக வசித்து வருகின்றனர். குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்பகுதி மக்கள் வீடு கட்டி உள்ளனர்.
பெரும்பாலானோர் இந்த பகுதியில் நீண்ட காலமாக வசிப்பதால், சில ஆண்டுகளுக்கு முன்பு பலருக்கு பட்டா வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் சிலர் ஷெட் அமைத்தனர். இதை நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
சாலை மறியல்
இந்தநிலையில், நேற்று இந்த பகுதியை சேர்ந்த மக்கள் திடீரென ஊட்டி பஸ் நிலையத்தின் முன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் அமர்ந்துக்கொண்டு, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. முக்கிய சாலை என்பதால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
இது குறித்த தகவலின் பெரில் ஊட்டி போலீஸ் துணை சூப்பரண்டு யசோதா, தாசில்தார் ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையில் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், அவர்களை சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தாசில்தார் ராஜசேகரன் கூறும் போது, 'கஸ்தூரிபாய் காலனி நகராட்சிக்கு சொந்தமான பகுதி. இங்கு 5 வருடங்களுக்கு மேல் வசித்து வந்தவர்களுக்கு அரசாணைப்படி ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் ஒரு சிலருக்கு பட்டா கிடைக்கவில்லை. அந்த பகுதியில் அவர்கள் நீண்ட காலமாக வசிப்பதால், நகராட்சி நிர்வாகம் அவர்களை அப்புறப்படுத்தாமல் உள்ளனர். இந்தநிலையில், புதிதாக அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதால், அவற்றை நகராட்சி அதிகாரிகள் அகற்றுகின்றனர்.அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாத நிலையில், அந்ந மக்களுக்கு மாற்றிடம் வழங்க பரிசீலிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் மாற்றிடத்துக்கு செல்ல மறுக்கின்றனர்' என்றார்.