சாமியார் மடத்தில் பாதையை தனிநபர் அடைத்ததால் பொதுமக்கள் 'திடீர்' சாலை மறியல்


சாமியார் மடத்தில் பாதையை தனிநபர் அடைத்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

சாமியார் மடத்தில் பாதையை தனிநபர் அடைத்ததால் பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

சாமியார் மடத்தில் பாதையை தனிநபர் அடைத்ததால் பொதுமக்கள் 'திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதை அடைப்பு

சாமியார்மடம் அருகே காட்டாத்துறை ஊராட்சிக்குட்பட்ட காரூட்டுவிளை பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். காரூட்டுவிளையிலிருந்து சாமியார்மடத்திற்கு செல்லும் பாதையை பொதுமக்கள் கடந்த 25 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது பட்டாநிலத்தில் உள்ள பாதை எனக்கூறி திடீரென இருபுறமும் இரும்பு கதவு போட்டு அடைத்தார். இதனால் காரூட்டுவிளை பகுதியில் உள்ள மக்களுக்கு வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

'திடீர்' சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலை அந்தபகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் இரும்பு கதவின் இருபுறமும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சாமியார்மடம்-வேர்கிளம்பி செல்லும் சாலையில் பிலா விளை பகுதியில் திடீர் என அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பாதையை இரும்பு கதவு போட்டு அடைத்த நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் கிடைக்கவில்லை. அவர் வேளாங்கண்ணிக்கு சென்றிருப்பதால் பின்னர் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனபோலீசார் பொதுமக்களிடம் கூறினர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் பாதையின் குறுக்கே போடப்பட்டிருந்த இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கதவு திறக்கப்பட்டது. பொதுமக்கள் வழக்கம்போல் அந்த பாதையை பயன்படுத்த தொடங்கினர். இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.பொதுமக்கள் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story