கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஆரணி அருந்ததியர்பாளையத்தில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரியும் கழிவுகளை அகற்றக்கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி அருந்ததியர்பாளையத்தில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரியும் கழிவுகளை அகற்றக்கோரியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் கால்வாய்
ஆரணி காந்தி ரோடு பெரியார் சிலை அருகே உள்ள அருந்ததியர் பாளையம் நகராட்சியின் 4-வது வார்டு பகுதியாகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மிகவும் தாழ்வான பகுதியில் வசிக்கின்றனர்.
இங்கு கழிவுநீர் கால்வாய்கள் சில மாதங்களுக்கு முன் தூர்வாரப்பட்ட நிலையில் அதில் இருந்து எடுக்கப்பட்டு வெளியே குவிக்கப்பட்ட சாக்கடை கழிவுகள் இன்னும் அகற்றப்படவில்லை.
அந்த கழிவுகள் கால்வாயில் மீண்டும் சேர்ந்துள்ளதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தற்போது அடிக்கடி மழை பெய்வதால் தண்ணீர் கால்வாயிலிருந்து வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது.
கொசுத்தொல்லை அதிகமாக உள்ள நிலையில் புகை அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.
நடவடிக்கை இல்லை
எனவே கால்வாயில் தூர்வாரிய கழிவுகளை அகற்றக்கோரியும் மீண்டும் தூர்வார கோரியும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.30 மணி அளவில் பெரியார் சிலை அருகே திரண்டு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜாங்கம், சப்- இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்து அனைவரையும் சமாதானப்படுத்தி எழுப்பினர்.
பின்னர் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி சம்பவ இடத்தை பார்வையிட்டு உடனடியாக கால்வாயில் தூர் வாருவதற்கும், தூர்வாரிய கழிவுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
மறியல் கைவிடப்பட்டது
இதனை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். எனினும் மறியல் காரணமாக அங்கு 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய ஊழியர்கள், அன்றாட வேைலக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.