வாழியூர் கூட்ரோட்டில் தடுப்புச்சுவரை அகற்றக்கோரி மறியல் செய்ய திரண்ட பொதுமக்கள்
வாழியூர் கூட்ரோட்டில் தடுப்புச்சுவரை அகற்றக்கோரி மறியல் செய்ய பொதுமக்கள் திரண்டனர்.
கண்ணமங்கலத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோட்டில் வாழியூர் கூட்ரோட்டில் சாலை விரிவாக்கம் செய்து தற்போது சாலையில் நடுவில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்புச்சுவரால் வாழியூர் கூட்ரோடில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது எனக்கூறி கடந்த சில தினங்களாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயற்சி செய்து வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாசில்தார் ஜெகதீசன், கண்ணமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று வாழியூர் கூட்ரோட்டில் முகாமிட்டிருந்தனர். ஆனால் சாலை மறியல் போராட்டம் நடத்த ஏராளமான ஆண்களும், பெண்களும் தடுப்புச்சுவர் மீது அமர்ந்து இருந்தனர்.
அவர்கள் தடுப்பு சுவரை இடிக்க முற்பட்டனர். அவர்களை ஆரணி தாசில்தார் ஜெகதீசன் மற்றும் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா ஆகியோர் சமாதான படுத்தி பழைய படி வாழியூருக்கு செல்ல ஏதுவாக வழி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பெண்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.