கொடைக்கானலில் நகராட்சி வாகனங்களை சிறை பிடித்த பொதுமக்கள்


கொடைக்கானலில் நகராட்சி வாகனங்களை சிறை பிடித்த பொதுமக்கள்
x

கொடைக்கானலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் தாலுகா அடுக்கம் ஊராட்சி பிரகாசபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அடுக்கத்தில் இருந்து இந்த கிராமத்துக்கு செல்லும் சாலை பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனங்களை சாலையின் குறுக்காக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள குப்பைகளை சேகரிப்பதற்காக நகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் வந்தன. அவற்றை சிறைபிடித்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்ட‌த்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story