குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்


குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்
x

குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறை அருகே சமுத்திரம் கிராமத்தில் உள்ள குடித்தெரு பகுதியில் ஒரு சமூகத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முற்றிலுமாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்தும் உடனடியாக காவிரி குடிநீர் வழங்கக்கோரியும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சமுத்திரத்தில் இருந்து திருச்சி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த சமுத்திரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் மற்றும் மணப்பாறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை லாரி மூலம் குடிநீர் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story