போலீஸ்காரரின் உடலை ஊருக்குள் விட பொதுமக்கள் மறுப்பு


போலீஸ்காரரின் உடலை ஊருக்குள் விட பொதுமக்கள் மறுப்பு
x

தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வாணியம் பாடி போலீஸ்காரரின் உடலை ஊருக்குள் விட பொதுமக்கள் மறுத்துவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வாணியம் பாடி போலீஸ்காரரின் உடலை ஊருக்குள் விட பொதுமக்கள் மறுத்துவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்காரர் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருணாப்பட்டு ஊராட்சி திரு.வி.க. நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரபு (வயது 32). இவருக்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மைசூர் பகுதியைச் சேர்ந்த வசு (23) என்பவருடன் திருமணம் நடந்தது. கிஸ்மிதா என்கிற ஒரு குழந்தை உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியில் ஆயுதப்படை பிரிவில் பிரபு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று அவருடைய உடல் சொந்த ஊரான இருணாப்பட்டு திரு.வி.க. நகருக்கு எடுத்து வரப்பட்டது.

பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்

அப்போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டவர் உடலை இங்கே எடுத்து வரக்கூடாது. அது எங்கள் ஊருக்கு ஆகாது என்று கூறி, தற்கொலை செய்துகொண்ட பிரபுவின் உடலை ஊருக்குள் விடாமல் பொதுமக்கள் சுமார் 2 மணி நேரமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் அப்பகுதி மக்களுடன் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சமரசம் அடைந்தனர். தொடர்ந்து ஊருக்கு வெளியே உடலை வைத்து சடங்குகள் செய்து அருகே பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

சமரச பேச்சு வார்த்தையின் போது பக்கத்து கிராமமான ஆண்டியப்பனூர் பகுதி இளைஞர்கள், இறந்த போலீஸ்காரர் பிரபுவின் உடலை ஊருக்குள் விட வேண்டும் என கூறியதால் இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story