உடைந்த கால்வாயை சீரமைத்த பொதுமக்கள்
உடைந்த கால்வாயை சீரமைத்த பொதுமக்கள்
அழகியமண்டபம்:
வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை, மணக்கரை பகுதிகளுக்கு இரட்டைக்கரை கால்வாயின் துணை கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாய் தண்ணீரை பொதுமக்கள் விவசாயத்திற்கும், தங்களின் அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கால்வாயில் ஆங்காங்கே தடுப்பு சுவர்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலைகளிலும் அருகில் உள்ள நிலங்களிலும் பாய்ந்து கொண்டிருந்தது. இதனால் கால்வாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மாடத்தட்டுவிளை ஊர் பொதுமக்கள் சார்பில் இளைஞர்கள் மற்றும் முதியோர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கால்வாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் ரூ.50 ஆயிரம் நிதி திரட்டி கால்வாயில் உடைந்த பகுதிகளை சீரமைத்தனர். இவர்களின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.