கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

ஆரணி அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கல்குவாரி

ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பாறையை கல்குவாரியாக நடத்த கடந்த 2020-ம் ஆண்டு வேலூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் குத்தகைக்கு எடுத்தார். இதற்கான காலக்கெடு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது.

ஏலம் எடுத்த நாள் முதல் இதுவரை கல்குவாரியை அவர் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கல்குவாரியை நடத்த வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த பகுதி கிராமமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், ஆரணி உதவி கலெக்டர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், ஆரணி தாசில்தார் ஆகியோரிடம் தொடர்ந்து புகார் மனு கொடுத்து வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் சரவணன் இன்று கல்குவாரியை நடத்துவதற்காக பூஜை செய்து, கற்களை உடைக்க ஊழியர்களுடன் சென்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு முள்ளண்டிரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், இங்கே கல்குவாரி செயல்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றனர். அதற்கு அதிகாரிகள், கலெக்டரிடம் உரிய புகார் அளித்தால் கனிமவளத்துறை மூலம் இதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் சாலை மறியலில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரித்தனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story