குப்பைகளை தீவைத்து எரிப்பதால் பொதுமக்கள் அவதி
சின்னாளப்பட்டி பகுதியில் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்று பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
சின்னாளப்பட்டி பேரூராடசி அலுவலக கூட்டரங்கில், பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் செல்வராஜ் வரவேற்று பேசினார். இளநிலை உதவியாளர் கலைச்செல்வி தீர்மான நகலை வாசித்தார். இந்த கூட்டத்தில் வரவு-செலவு உள்பட 9 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இதில், அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். பின்னர் கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
7-வது வார்டு கவுன்சிலர் ஹேமா பேசுகையில், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை, மேட்டுப்பட்டி மயானத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டி எரிக்க வேண்டும் என்றார். இதே கோரிக்கையை வலியுறுத்தி 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயகிருஷ்ணன் பேசினார்.
இதற்கு பதிலளித்த செயல் அலுவலர், குப்பைக்கிடங்கில் இடம் இல்லாததால் அவ்வப்போது இதுபோன்று குப்பைகள் எரிக்கப்படுகின்றன. வருங்காலங்களில் இவ்வாறு நடைபெறாமல் பார்த்து கொள்கிறோம். அதேபோல் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேடி வருகிறோம் என்றார்.
இதேபோல் கவுன்சிலர்கள் அமல்ராஜ், லட்சுமி, குமரக்கண்ணன் ஆகியோர் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனர். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. முடிவில் தலைமை எழுத்தர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.