சுந்தராம்பாள் நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி


சுந்தராம்பாள் நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி
x

சுந்தராம்பாள் நகரில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே புகழூர் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

தேசிய நெடுஞ்சாலை

சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக சேலம்-மதுரை, மதுரை-சேலம் ஆகிய இருவழி தடத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை கடந்த 2008-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியது. தற்போது இந்த 2 தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்தநிலையில் கடந்த 2008-ம் ஆண்டு புன்செய் புகழூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு, வள்ளுவர்நகர் வடக்கு, சுந்தராம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் செல்லும் வகையில் இரு தேசிய நெடுஞ்சாலைக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு அந்த குழாய் வழியாக வரும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்காக மதுரை-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் போடப்பட்டுள்ள சர்வீஸ் சாலை அருகே பெரிய அளவில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் வெட்டப்பட்டது.

கடும் துர்நாற்றம்

அங்கிருந்து கழிவு நீர் வெளியேறும் வகையில் பள்ளமான பகுதியில் குழாய் பதிக்காமல் மேடான பகுதியில் குழாய் பதித்ததால் கடந்த 14 ஆண்டுகளாக குறிப்பிட்ட பகுதியில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. சுந்தராம்பாள் நகர், வள்ளுவர் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது.

இந்தநிலையில் பேரூராட்சி தற்போது புகழூர் நகராட்சியாக உருவெடுத்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

14 ஆண்டுகளாக அவதி

நாணப்பரப்பு பகுதியை சேர்ந்த முருகேசன்:- கடந்த 14 ஆண்டுகளாக இந்த சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திட்டமிட்டு சாக்கடை கால்வாயை கட்டாததால் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே சிறந்த பொறியாளர்கள் மூலம் உரிய திட்டம் வகுத்து கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உழவர் சந்தை

சுந்தராம்பாள் நகரை சேர்ந்த சரவணன்:- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் தங்கு தடையின்றி வெளியேற சரியான பொறியாளரை நியமித்து அதற்குண்டான திட்டம் வகுத்து செயல்படுத்தி இருந்தால் இது போன்ற பிரச்சினை இருந்திருக்காது. கடந்த 14 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே புகழூர் நகராட்சி நிர்வாகம் திறமையான பொறியாளர் மூலம் திட்ட வகுத்து பள்ளத்தில் தேங்கியுள்ள சாக்கடை நீர் வெளியேறும் வகையில் குழாய் பதித்து உழவர் சந்தை அருகே செல்லும் சாக்கடையில் கலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாக்கடை கால்வாய் அமைப்பு

தெய்வசிகாமணி:- கடந்த 2008-ம் ஆண்டு எங்கள் வீட்டின் வழியாகத்தான் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. வள்ளுவர் நகர் வடக்கு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். அந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் செல்லும் வகையில் இரு தேசிய நெடுஞ்சாலையின் அடியில் பெரிய குழாய் பதிக்கப்பட்டு அந்த குழாய் வழியாக கழிவுநீர் வருகிறது. அந்த கழிவு நீர் வெளியேறும் வகையில் சுந்தரம்மாள் நகர் பகுதியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறும் வகையில் திட்டமிட்டு சாக்கடை கால்வாய் கட்டப்படாததால் சாக்கடை கழிவுநீர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அண்ணா நகரை சேர்ந்த சுரேஷ்:- வள்ளுவர் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்காமல் வெளியேறும் வகையில் குழாய் பதிக்கப்பட்டு இந்த கழிவுநீர் சரியானபடி செல்கிறதா? என அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதனை செய்யாததால் இப்பகுதி மக்கள் கடந்த 14 ஆண்டுகளாக அவதியடைந்து வருகிறார்கள். எனவே புகழூர் நகராட்சி நிர்வாகம் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story