குப்பைகளை கொட்ட முடியாமல் பொதுமக்கள் அவதி
ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குப்பைகளை கொட்ட முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குப்பைகளை கொட்ட முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
வேலை நிறுத்த போராட்டம்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் விடுவதை கைவிட வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.725 ஏப்ரல் மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 23-ந்தேதி முதல் தூய்மை பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இதனால் குப்பை சேகரிக்கும் பணிக்கு தூய்மை பணியாளர்கள் யாரும் செல்லவில்லை.
ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி கூறும்போது, 'தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை (அதாவது இன்று) ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைவரும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
அதைத்தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதன் முடிவை பொறுத்தே தூய்மை பணியாளர்களின் போராட்டமும் முடிவு செய்யப்படும்' என்றார்.
மலைபோல் குவிந்த குப்பைகள்
இதற்கிடையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் கடந்த 3 நாட்களாக குப்பைகள் சேகரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட வழியில்லாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டு கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
அகில்மேடு வீதி, பெரியவலசு, கருங்கல்பாளையம், சூளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் ரோட்டோரம் குப்பைகளை மலைபோல் கொட்டியும் வைத்து உள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.