விழுப்புரத்தில் கோவில் குளம் சீரமைக்கும் பணி நகரமன்ற தலைவர் ஆய்வு
விழுப்புரத்தில் கோவில் குளம் சீரமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் கே.கே.சாலை பகுதியில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள குளத்தை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்பணியை நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளம் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் கே.கே.சாலை மயானம் பல ஆண்டுகளாக சீரமைக்காமலும், முட்புதர்கள் மண்டியும் காணப்பட்டதால் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையிலும், இன்னும் சில நாட்களில் மாசித் திருவிழாவையொட்டி இங்கு நடைபெறும் மயானக்கொள்ளை நிகழ்ச்சிக்காகவும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மயானம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முட்செடிகளை அகற்றி, பராமரிக்குமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, பணி ஆய்வாளர் ஹரிகரன், உதவி பொறியாளர் ராபர்ட்கிளைவ், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற கவுன்சிலர் ரியாஸ்அகமது மற்றும் பலர் உடனிருந்தனர்.