சேலத்தில் பொதுமக்கள் மறியல்
சேலத்தில் சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
சேலம் பழைய பஸ்நிலையம் கல்லாங்குத்து அருகே உள்ள தேவேந்திரபுரம் பகுதியில் ஸ்மார்ட் திட்டப்பணிக்காக சாலை தோண்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலை சீரமைக்கப்படாமல் பல மாதங்களாக அப்படியே கிடப்பதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரி நேற்று காலை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் ஆர்.எஸ்.பி. கட்சி நிர்வாகிகள் காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள், சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீசார் இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கும்படி அவர்களிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.