குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சோதனை


குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சோதனை
x

தஞ்சை கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து நெல்மூட்டைகள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறதா? என குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் கொள்முதலும் அதிக அளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த நிலையில் தற்போது வெயில் அடித்து வருவதால் அறுவடையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு கொள்முதலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் நெல் மூட்டைகளை தஞ்சை மாவட்டத்திற்கு எடுத்து வந்து நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பதாக புகார்கள் எழுந்தன. இதனை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

போலீஸ் சூப்பிரண்டு சோதனை

இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் டி.ஜி.பி.ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தஞ்சை மாவட்டத்தில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சையை அடுத்த அருள்மொழிப்பேட்டை மற்றும் கோவிலூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு சென்று அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருப்பு உள்ள நெல் மூட்டைகள் மற்றும் பதிவேடுகள் முறையாக உள்ளதா? எனவும் சோதனை செய்தனர். அதனைத்தொடர்ந்து தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள நெல் அரவை ஆலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கடும் நடவடிக்கை

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், வெளிமாவட்ட வியாபாரிகள் நெல்மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story