விருத்தாசலம் அருகே இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம் செய்யும் பொதுமக்கள்


விருத்தாசலம் அருகே    இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம் செய்யும் பொதுமக்கள்
x

விருத்தாசலம் அருகே இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று பொதுமக்கள் அடக்கம் செய்தனர்.

கடலூர்

விருத்தாசலம்,


ஆபத்தை உணராமல்...

விருத்தாசலம் ஒன்றியம் சித்தேரிக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை இறுதி சடங்குகள் முடிவடைந்தபின் அப்பகுதியில் உள்ள ஏரியை தாண்டி சுடுகாட்டில் புதைப்பது வழக்கம். அவ்வாறு இறந்தவர்களின் உடலை புதைக்கும் போது ஏரியில் தண்ணீர் தேங்கி இருந்தால் ஆபத்தை உணராமல் படகு மூலமாகவும், தண்ணீரில் இறங்கி உடலை சுமந்து சென்றும் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த ரெங்கநாதன்(வயது 75) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து நேற்று மாலை அவரது உடலுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்ததும் அவரது உடலை இறுதி ஊர்வலமாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.

இடுப்பளவு தண்ணீரில்...

அப்போது கடந்த சில நாட்களாக விருத்தாசலம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

இதனால் ஆபத்தை உணராமல் ரங்க நாதனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பாடையுடன் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

இதுபோன்று இப்பகுதி மக்கள் ஆபத்தை உணராமல் சென்று வருவதை அதிகாரிகள் கண்டும், காணாமலும் சென்று விடுகின்றனர். மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏதேனும் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனர்.


Next Story