சோழவந்தான் அருகே வயல்வெளியில் பிணத்தை தூக்கிச்செல்லும் பொதுமக்கள் -பாலம் கட்டி தர கோரிக்கை
சோழவந்தான் அருகே வயல்வெளியில் பிணத்தை தூக்கிச்செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் பாலம் கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சோழவந்தான்
மதுரை அருகே நாச்சிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நாச்சிகுளம், கீழ் நாச்சிகுளம், கரட்டுப்பட்டி மற்றும் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஒரு சமுதாயத்திற்கு பரம்பரை பரம்பரையாக தனி சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு கோட்டைமேடு, நரிமேடு ஆகிய 2 கிராமங்களுக்கு மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்ல முன்பு பெரியாறு பாசன கிளை கால்வாய் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டு இருந்தது. அதையொட்டி உள்ள கரை ஓரமாக சென்று மயானத்திற்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கிளை கால்வாய் அகலப்படுத்தப்பட்ட போது படிக்கட்டுகள் இருந்த இடத்தில் மீண்டும் படிக்கட்டு அமைக்காமல் சமதளமாக பூசி விட்டதால் மயானத்திற்கு செல்லும் வழி தடைபட்டு போனது. இதனால் தற்போது நரிமேடு சாலை வழியாக வயல்வெளிக்குள் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்து பொதுப்பணித்துறை மூலம் சிறுபாலம் அமைக்க உத்தரவு பெறப்பட்ட பின்னும் தற்போது பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இறந்த ஒருவரது உடலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாடை கட்டி வயல்வெளி வழியாக சென்றனர். எனவே இந்த அவல நிலை தொடராமல் இருக்க விரைவாக பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.