தென்காசியில் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் அணிந்து வந்த பொதுமக்கள்
தென்காசியில் அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் வெளிநோயாளிகள், ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பொது இடங்களிலும் அனைவரும் முகக்கவசம் அணிவது நல்லது என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் அணியும் நடைமுறை நேற்று முதல் மீண்டும் அமலுக்கு வந்தது. தென்காசி மாவட்டத்திலும் அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை முதலே நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.