அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
வடமதுரை அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததால் அரசு பஸ்சை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எந்திர கோளாறு
வடமதுரை அருகே உள்ள பிலாத்து கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கீழ் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பழனிச்சாமி (வயது 45) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த ரேஷன் கடையில் பிலாத்து கலைஞர் நகர், பாரதிபுரம், கல்குளம், வாலிசெட்டிபட்டி, தலைவெட்டி குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வாலிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது இணையதள பாதிப்பால் பயோமெட்ரிக் எந்திரம் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் பொதுமக்கள் பொருள் வாங்க சென்றபோதும், எந்திரம் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இவ்வாறு அடிக்கடி எந்திர கோளாறு ஏற்படுவதால் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள், விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசு பஸ் சிறைபிடிப்பு
பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள் பிலாத்து ரேஷன் கடை அருகே கம்பிளியம்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த திண்டுக்கல்லில் இருந்து மம்மானியூர் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பிலாத்து கூட்டுறவு கடன் சங்க செயலாளர் முருகேசன் பொதுமக்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.