காலிக்குடங்களுடன் டிப்பர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்


காலிக்குடங்களுடன் டிப்பர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

எஸ்.புதூர் ஒன்றியம், மணலூர் ஊராட்சியில் உள்ளது பொட்டப்பட்டி கிராமம். இங்கு சுமார் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு அதே பகுதியில் போர்வெல் மூலமாக தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கேசம்பட்டி-பொட்டப்பட்டி, மேலவண்ணாரிருப்பு சாலை விரிவாக்க பணியின் போது சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த பைப் லைன்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக அந்த பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று, மணலூர் ஊராட்சி தலைவர் புகழேந்தி, துணை தலைவர் பழனிச்சாமி, எஸ்.புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மென்னன் ஆகியோர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டனர். மேலும் அங்கு சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்ட டிப்பர் லாரியை சிறைபிடித்து சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க மாற்று வழிவகை செய்வதாக கூறினர். அதன் பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story