நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்


நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
x

விருத்தாசலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தடுத்து நிறத்திய பொதுமக்கள் மாற்று இடம் வழங்க கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதன் பேரில் கடலூர் ரோடு இந்திரா நகரில் 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகளை அளவீடு செய்து அவற்றை அகற்றும் பணி கடந்த ஜூலை 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல்

சில நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விருத்தாசலம் தாசில்தார் தனபதி முன்னிலையில் நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் கடலூர்- விருத்தாசலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் போலீசார் திருப்பி விட்டனர்.

தடுத்து நிறுத்தினர்

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் ராஜ்குமார், நகர செயலாளர் முருகன், ஒருங்கிணைப்பாளர் அருள், பூக்கடை ரவி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆக்கிரமிப்பு வீடுகளில் வசிக்கம் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்து வந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும் பொக்லைன் எந்திரங்களின் டிரைவர்களையும் அங்கிருந்து விரட்டினர். இதனால் டிரைவர்கள் பொக்லைன் எந்திரங்களை அப்படியே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மாற்று இடம் வேண்டும்

தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனியை சந்தித்து நேரில் முறையிட்டனர். அப்போது எங்களுக்கு குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும். குடியிருக்கும் வீடுகளை இடிப்பதற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதை ஏற்ற சப்-கலெக்டர் பழனி தற்போது ஆக்கிரமிப்பு கடைகள் மட்டுமே அகற்றப்படுகிறது. மாற்று இடம் வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Next Story