முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ரூ.17 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது


முதலீட்டுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி  ரூ.17 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது
x

முதலீடு செய்யும் தொகைக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி, ரூ.17 கோடி மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர்

தேனி

நிதி நிறுவனம்

தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 40). இவர் விவசாயம் செய்து வருவதோடு, கம்பத்தில் ஒரு ஓட்டலிலும் வேலை பார்த்து வருகிறார். தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் இவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவையை தலைமையிடமாக கொண்ட தனியார் நிதி நிறுவனத்தின் கிளை தேனி பழைய பஸ் நிலையம் அருகில் கடந்த 2020-ம் ஆண்டு செயல்பட்டது. அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த முத்துக்காளை மகன் முத்துச்சாமி (32) நிர்வாக இயக்குனராகவும், வத்தலக்குண்டுவை சேர்ந்த ஆனந்த் என்பவர் கிளை மேலாளராகவும் இருந்தனர்.

முதலீட்டுக்கு அதிக வட்டி

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும், அந்த தொகையை மாதந்தோறும் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினர். அதை நம்பி நான் பல தேதிகளில் மொத்தம் ரூ.11 லட்சம் முதலீடு செய்தேன்.

என்னைப்போல், தேனியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் ரூ.22 லட்சமும், இந்திரா என்பவர் ரூ.77 லட்சத்து 50 ஆயிரமும் முதலீடு செய்தனர். நாங்கள் 3 பேரும் சேர்ந்து மொத்தம் ரூ.1 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்தோம். முதலீடு செய்தபோது பதிவு செய்யாத ஒப்பந்த பத்திரத்தில் நிர்வாக இயக்குனர் முத்துச்சாமி கையொப்பமிட்டு கொடுத்தார்.

எங்களைப் போன்று பலரும் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 2 மாதம் மட்டும் லாப தொகை என்று கூறி சிறிய அளவில் தொகை கொடுத்தனர். அதன்பிறகு பணம் எதுவும் கொடுக்கவில்லை. இதனால், தேனியில் நிதி நிறுவன கிளை செயல்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தபோது அது பூட்டப்பட்டு இருந்தது. விசாரித்த போது, பொதுமக்களிடம் வாங்கிய பணத்தை மோசடி செய்துவிட்டு நிறுவனத்தை மூடிவிட்டு சென்றதாக தெரியவந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கைது

இதேபோல் பலரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார்கள் கொடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ், இன்ஸ்பெக்டர் சீமைராஜ் ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து முத்துச்சாமி, ஆனந்த் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முத்துச்சாமியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

ரூ.17 கோடி மோசடி

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த நிதி நிறுவனத்தின் பெயரில் தமிழகத்தின் பல இடங்களிலும் மக்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில் சுமார் 800 பேரிடம் இந்த நிதி நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்வதாக கூறி பணம் பெற்றுள்ளனர். சுமார் ரூ.17 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.4 கோடி வசூல் செய்து மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.


Next Story