ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு அனுப்பிய சம்மன் குறித்து விளக்கம்


ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு அனுப்பிய சம்மன் குறித்து விளக்கம்
x

ஆரூத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு அனுப்பியுள்ள சம்மன் குறித்து விளக்கம் அளிக்கும்படி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் பெரும் தொகையை முதலீடுகளாக பெற்று சுமார் ரூ.2,438 கோடி மோசடி செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பா.ஜ.க., ஓ.பி.சி., பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு, இந்த மோசடி பணத்தில் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது தெரியவந்தது.

அரசியல்

அதன் அடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி ஆர்.கே.சுரேசுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், ஆர்.கே.சுரேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், "பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ என்னை அணுகினார். அதுதொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்தது. எனது மனைவி, குழந்தையை கவனித்து கொள்வதற்காக வெளிநாட்டில் இருப்பதால், போலீஸ் விசாரணைக்கு நேரடியாக ஆஜராக முடியாது" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "அரசியல் பழிவாங்கும் விதமாக போலீசார் மனுதாரருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்" என்று வாதிடப்பட்டது.

ரத்து?

மனுதாரருக்கு அனுப்பப்பட்ட சம்மனை படித்து பார்த்த நீதிபதி, ஆவணங்களுடன் ஆஜராகும்படி அனுப்பப்பட்டுள்ள சம்மனில், எந்த மாதிரியான ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என்பது போன்ற விவரங்கள் இல்லை. அதனால், இந்த சம்மனை ரத்து செய்தால் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், "சம்மனை ரத்து செய்ய வேண்டாம். இந்த சம்மன் அனுப்பப்பட்டது குறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சம்மன் அனுப்பியது குறித்து போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story