நாகூர் துறைமுகத்தில் மீன் விற்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை: வீடுகள்- வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; 2 மீனவர்கள் படுகாயம்


நாகூர் துறைமுகத்தில் மீன்களை விற்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். வீடுகள்-வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

நாகூர் துறைமுகத்தில் மீன்களை விற்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். வீடுகள்-வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீன்கள் ஏலம் விடுவதில் பிரச்சினை

நாகை மாவட்டம், நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேலபட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

மீன்பிடி துறைமுகத்தில் தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என மேல பட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் துறைமுகத்தில் மீன்களை விற்பது தொடர்பாக கடந்த மாதம் 18-ந் தேதி மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்த மீன்களை மேலபட்டினச்சேரி மீனவர்கள் தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமாதான கூட்டம்

மேலும், நாகை கலெக்டர் அலுவலகத்திற்கும் சென்று தங்களுக்கும் துறைமுகத்தில் மீன்விற்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி மீன்பாடி வண்டிகளுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக கடந்த மாதம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற சமாதான கூட்டத்தில் மேலபட்டினச்சேரி மீனவர்களுக்கும் துறைமுகத்தில் மீன் விற்பதற்கும், ஏலம் விடுவதற்கும் சம உரிமை அளிக்க வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டது.

தாக்குதல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ், மற்றுமொரு சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது மற்றொரு தரப்பு மீனவர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். மேலும் மேலபட்டினச்சேரியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களையும், இரு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் தங்களுடைய மீனவ கிராமத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை வெட்டாற்று பாலத்தில் 2 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, துணை சூப்பிரண்டு சரவணன், நாகூர் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. தாக்குதல் மற்றும் வீடுகள், வாகனங்கள் சூறையாடப்பட்ட சம்பவங்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மீது நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story