எழுமலை அருகே மாணவர்களுக்கு இடையே மோதல் - 15 பேர் மீது வழக்கு
எழுமலை அருகே மாணவர்களுக்கு இடையே மோதல் நடந்தது, இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உசிலம்பட்டி
எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சூலப்புரம், சீல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று சூலப்புரத்தில் இருந்து எழுமலையில் உள்ள பள்ளிக்கு மாணவ-மாணவிகள் அரசு பஸ்சில் வந்தனர். அப்போது சீல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஏறினர். இதில் பஸ்சில் ஏறுவது குறித்து 2 கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் சூலப்புரத்தை சேர்ந்த மாணவனை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சூலப்புர கிராம மக்கள் மாணவனை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த எழுமலை இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் மறியலுக்கு முயன்ற கிராம மக்களை சமாதானப்படுத்தி மாணவனை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட சூலப்புரத்தைச் சேர்ந்த மாணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவன் உள்பட 15 பேர் மீது எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.