விழுப்புரம் அருகே சுங்கச்சாவடியில் இரு தரப்பினரிடையே மோதல் 7 பேர் கைது
விழுப்புரம் அருகே சுங்கச்சாவடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே உள்ள தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் தாரணி (வயது 21). இவர் அங்குள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விழுப்புரம் அருகே வெங்கந்தூரை சேர்ந்த சதீஷ் (28), எழிலரசன் (28), அருண்குமார் (25) மற்றும் 18 வயதுடைய சிறுவன் ஆகியோர் ஒரு காரில் விழுப்புரத்தில் இருந்து வெங்கந்தூர் சென்றனர். தென்னமாதேவி சுங்கச்சாவடியில் அந்த கார் வந்தபோது அதற்கு சுங்கவரி வசூலிப்பதற்காக தாரணி ரசீது போட்டுள்ளார். ஆனால் அவர்கள் 4 பேரும் பணம் கொடுக்காமல் தகராறு செய்து தாரணியை திட்டினர். இதை அந்த சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் ஊழியரான அதே கிராமத்தை சேர்ந்த நாகமுத்து (57) என்பவர் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சதீஷ் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து நாகமுத்துவை தாக்கினர்.
7 பேர் கைது
இதனிடையே இப்பிரச்சினை முடிந்து மீண்டும் எழிலரசன், சதீஷ் உள்ளிட்டவர்கள் காரில் அதே சுங்கச்சாவடி வழியாக திரும்பி வந்தனர். அப்போது நாகமுத்து, நந்தகோபால் (23), நாராயணன் (27), ராஜேஷ் (25) ஆகியோர் சேர்ந்து உருட்டுக்கட்டையால் எழிலரசன் மற்றும் அவரது தரப்பினரை தாக்கி கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தாரணி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், எழிலரசன், அருண்குமார், 18 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அதேபோல் எழிலரசன் அளித்த புகாரின்பேரில் நாகமுத்து உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகமுத்து, நாராயணன், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர்.