கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் மோதல்
பாவூர்சத்திரம் அருகே, கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் 8 பேர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே, கோவில் கொடை விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதில் 8 பேர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் கொடை விழா
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரம் நாடாகண்ணுபட்டியில் பெரிய அம்மன் கோவில் கொடை விழாவும், அருகே உள்ள குமாரசாமிபுரத்தில் முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழாவும் தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.
கொடை விழா நேற்று முடியும் தருவாயில், குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த முப்புடாதி அம்மன் கோவில் பெண்கள் காலையில் முளைப்பாரி ஊர்வலம் நடத்தி முடித்து விட்டனர்.
மோதல்
பின்னர் மதியம் நாடாகண்ணுபட்டி பெரிய அம்மன் கோவில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். அப்போது அந்த பகுதியில் வெடி வெடித்துள்ளனர். இதனை குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நபர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரையொருவர் கல்லால் தாக்கிக்கொண்டனர்.
8 பேர் காயம்
இதில் இருதரப்பிலும் மொத்தம் 8 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.