திருமோகூரில் இருதரப்பினரிடையே மோதல்:தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டிடம் பெண்கள் மனு


திருமோகூரில் இருதரப்பினரிடையே மோதல்:தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டிடம் பெண்கள் மனு
x

திருமோகூரில் இருதரப்பினரிடையே மோதலில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டிடம் பெண்கள் மனு அளித்தனர்

மதுரை


மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், வீடுகள் சேதமடைந்தன. 4 பேர் காயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் திருமோகூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இந்திரா காலனியைச் சேர்ந்த சிலர், விழாவை சீர்குலைக்கும் வகையில் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதனை பெற்று கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

இதுகுறித்து அந்த பெண்கள் கூறுகையில், தாக்குதல் சம்பவத்தில் தொடர்பில்லாதவர்களை போலீசார் தேடி வருகின்றனர். குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வீடு, வீடாக தேடி வருகின்றனர். ஆனால் குற்றம் செய்தவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடிக்கொண்டிருக்கின்றனர். எனவே, குற்றம் செய்தவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story