எடப்பாடி அருகே இருதரப்பினர் இடையே மோதல் போக்கு:கோவில் சிலை ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீசார்


எடப்பாடி அருகே இருதரப்பினர் இடையே மோதல் போக்கு:கோவில் சிலை ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
x

எடப்பாடி அருகே வேட்டுவபட்டி கிராமத்தில் கோவிலில் சிலையை நிறுவ இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளது. இதனிடையே கோவிலுக்கு சிலையை ஊர்வலமாக எடுத்து வந்த ஒருதரப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

எடப்பாடி,

கோவில் திருப்பணி

எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி ஊராட்சி, வேட்டுவபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் திருப்பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இந்நிலையில் கோவிலை புனரமைக்கும் பணியில் நிதி முறைகேடு செய்ததாக கூறி ஒரு சிலரை ஊர் மக்கள் திருப்பணி குழுவில் இருந்து விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட கோவிலின் புனரமைப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், கோவில் கருவறையில் நிறுவுவதற்கான அம்மன் சிலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மகா மாரியம்மன் கோவில் கருவறைக்குள் அமைவதற்கான அம்மன் சிலைகளை இரு தரப்பினரும் தனித்தனியாக ஏற்பாடு செய்து கோவிலில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

பதற்றமான சூழல்

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட கோவிலில் சிலை நிறுவுவதற்காக ஒரு தரப்பினர் ஊர்வலமாக வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ஊர்வலமாக வந்த ஒரு தரப்பினரை தடுத்து நிறுத்தினர்.

தற்போது கோவிலில் சிலை அமைப்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிவிலேயே சிலை நிறுவுவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் அதுவரை இரு தரப்பினரும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பகுதியில் அத்துமீறி நுழைந்து சிலைகளை நிறுவ முற்படக்கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து ஊர்வலமாக வந்தவர்களை அங்கிருந்து போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.


Next Story