மேலூர் அருகே இருதரப்பினர் மோதல் : இலங்கை அகதிகள் முகாமில் புகுந்து கார், மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தினர்-போலீசார் விசாரணை
மேலூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் புகுந்து கார், மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்
மேலூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் புகுந்து கார், மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகராறு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதன் அருகே இடையபட்டியில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த அழகர்(வயது 31) என்பவர் இலங்கை அகதிகள் முகாமுக்குள் குடிபோதையில் வந்துள்ளார். அப்போது அங்கு இருந்தவர்களுக்கும், அழகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதன் பின்பு இடையபட்டி அரசு குடியிருப்புக்கு சென்று அழகர் அவரது ஆதரவாளர்களுடன் கும்பலாக இலங்கை அகதிகள் முகாமுக்குள் புகுந்தார். பின்னர் அங்கிருந்த கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் உள்பட 5 வாகனங்களை அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர். இதைதொடர்ந்து கும்பல் ஒன்று இடையபட்டி அரசு குடியிருப்பில் உள்ள சில வீடுகள் மீது தாக்குதல் நடத்தியது.
விசாரணை
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மேலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆர்லியஸ்ரெபோனி போலீசாருடன் சென்று அமைதியை ஏற்படுத்தினார்.
இலங்கை அகதிகள் முகாம் தாக்குதல் சம்பவம் குறித்து மேலூர் போலீசாரும், இடையபட்டி அரசு குடியிருப்பு தாக்குதல் குறித்து ஒத்தக்கடை போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.