மரக்காணம் அருகே மீனவர் கிராமத்தில் கோஷ்டி மோதல் 4 பேர் படுகாயம்- பதற்றம்
மரக்காணம் அருகே மீனவர் கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மரக்காணம்,
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனை மீறி மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கைப்பாணிக்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 30), நேற்று முன்தினம் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றார்.
இதனை பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த கார்த்தி (35), அரசு உத்தரவை மீறி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றது குறித்து இளையராஜாவிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோஷ்டி மோதல்
இந்த முன்விேராதத்தில் இளையராஜா தரப்புக்கும், கார்த்திக் தரப்புக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தனித்தனி கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.
இதில் இரு தரப்பையும் சேர்ந்த சோலைவள்ளி (60), சத்தியமூர்த்தி (35), மேகாயன் (50) உள்பட 4பேருக்கு தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மோதல் பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் கைப்பாணிக்குப்பம் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மேற்கொண்டு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, தெருவில் கூடியிருந்த மீனவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
மோதல் தொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீனவர்கள் கோஷ்டி மோதலால் கைப்பாணிக்குப்பம் மீனவர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.