விளாத்திகுளம் அருகே கோஷ்டி மோதல்-கல் வீச்சு;மாணவி உள்பட 10 பேர் காயம்


விளாத்திகுளம் அருகே நடந்த கோஷ்டி மோதலின்போது கல் வீச்சு சம்பவத்தில் மாணவி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே கபடி போட்டியால் ஏற்பட்ட பிரச்சினையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த கல்வீச்சில் மாணவி உள்பட 10 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கபடி போட்டியால் பிரச்சினை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த துலுக்கன்குளம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவில் கபடி போட்டி நடந்தது. இதில் சுற்று வட்டார கிராம அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி போட்டியில் சிலுவைபுரம் அணியும், கலைஞானபுரம் அணியும் விளையாடியது.

இதில் சிலுவைபுரம் அணி வெற்றி பெற்றது. அப்போது துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள், கலைஞானபுரம் அணியின் தோல்வியை கொண்டாடியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களில் 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் கலைஞானபுரம் வழியாக சென்றனர்.

கல்வீச்சில் 10 பேர் காயம்

அப்போது கலைஞானபுரத்தைச் சேர்ந்த தொண்டியம்மாள் என்பவரது வீட்டின் அருகில் சென்றபோது, அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதிக ஒலி எழுப்பியவாறும், கோஷமிட்டும் சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொண்டியம்மாள் கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த மேலும் சிலர் சேர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கினர். இதில் பள்ளிக்கூட மாணவி பிரியதர்ஷினி, பொன்னுசாமி, மாடசாமி, பரமசிவம் உள்ளிட்ட இரு தரப்பைச் சேர்ந்த சுமார்10 பேர் காயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

சாலை மறியல்

இதற்கிடையே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, துலுக்கன்குளம் கிராமத்தில் பொதுமக்கள் இரவில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் குளத்தூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக இரு தரப்பினரும் குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் மீதும், கலைஞானபுரத்தைச் சேர்ந்த 9 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு கிராமங்களிலும் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து குளத்தூர் போலீஸ் நிலையத்தில் நேற்று சமாதான பேச்சுவார்த்தை கூட்டம், தாசில்தார் சசிகுமார் தலைமையில் நடந்தது. இதில் இரு கிராம மக்களும் பங்கேற்றனர்.


Next Story