ஆலய செயலாளர் தேர்தல் முன்விரோதத்தில் மோதல்
மார்த்தாண்டம் அருகே கிறிஸ்தவ ஆலய செயலாளர் தேர்தல் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்த நிலையில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கிறிஸ்தவ ஆலய செயலாளர் தேர்தல் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்த நிலையில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்விரோதம்
மார்த்தாண்டம் அருகே உள்ள இலவுவிளை பகுதியில் ஒரு சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் செயலாளர் பொறுப்பு தேர்தல் தொடர்பாக காரவிளையை சேர்ந்த தாமஸ் (வயது62) என்பவருக்கும், வெட்டுக்காட்டு விளையை சேர்ந்த கிறிஸ்துராஜ் (50) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு தாமஸ் இலவுவிளை அருகே உள்ள வாழவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிறிஸ்துராஜ் அவருடைய மனைவி ஸ்டெல்லா (50), மற்றும் அவர்களது 17 வயது மகன் ஆகிய 3 பேரும் அவரை தடுத்து நிறுத்தி கையாலும், கம்பியாலும் தாக்கினர்.
காயமடைந்த தாமஸ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கிறிஸ்துராஜ், அவருடைய மனைவி ஸ்டெல்லா உள்பட 3 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காயமடைந்த தாமஸ் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
மேலும் 5 பேர் மீது வழக்கு
இதற்கிடையே கிறிஸ்துராஜ் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தான் சம்பவத்தன்று இரவு தனது ஸ்டூடியோவை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்லும் போது ஆலய செயலாளர் தேர்தல் தொடர்பான முன்விரோதத்தால் தாமஸ், நாசர் (70), அஜி (33), லிபின் (46), ஆல்வின் ஜோஸ் (35) ஆகிய 5 பேரும் சேர்ந்து தன்னை வழிமறித்து தாக்கி காயப்படுத்தியதாக கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் தாமஸ் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் காயமடைந்த கிறிஸ்துராஜ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.