100 பவுன் நகையுடன் வெளிநாட்டில் இருந்து வந்தவரை அழைத்துச் செல்வதில் மோதல்: 6 பேர் கைது


100 பவுன் நகையுடன் வெளிநாட்டில் இருந்து வந்தவரை அழைத்துச் செல்வதில் மோதல்: 6 பேர் கைது
x

100 பவுன் நகையுடன் வெளிநாட்டில் இருந்து வந்த பயணியை அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

திருச்சி தென்னூர் ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் முகமது யுவைஸ் (வயது 30). இவருடைய சகோதரர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, "தன் நண்பர் தினேஷ் என்பவர் மதுரை வருகிறார். அவரை பாதுகாப்பாக அழைத்து வீட்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் பணம் அதிகமாக கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.

எனவே முகமது யுவைஸ், திருச்சியில் இருந்து முஸ்தாக் (40) என்பவருடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர்கள் பயணி தினேசுக்காக காத்து இருந்தனர்.

இதற்கிடையில் தினேசை அழைத்து செல்ல கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த அகில் (27), சுதிஸ் (35), சபின் (30), ரிஜிஸ் (38) ஆகியோரும் வந்து விமான நிலையத்தில் காத்து இருந்தனர். அவர்களை கண்டதும் பயணி தினேஷ் அவர்களுடன் காரில் ஏறி சென்று விட்டார்.

மோதல்

இந்த நிலையில் முகமது யுவைஸ் தனது சகோதரனுக்கு போன் செய்தார். அவரை கேரளாவை சேர்ந்த நண்பர்கள் அழைத்து சென்றதாக தெரிவித்தார். உடனே முகமது யுவைஸ் உள்ளிட்டவர்கள் மண்டேலா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த அவர்களது காரை மடக்கி பிடித்தனர்.

அங்கு நடுரோட்டில் வைத்து பயணி தினேசை அழைத்து செல்வதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டதில் இருதரப்பிலும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அவனியாபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

6 பேர் கைது

விசாரணை நடத்தி இருதரப்பிலும் புகார் பெற்று அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் தினேசிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, "வெளிநாட்டில் இருந்து 100 பவுன் நகையை கொண்டு வந்தேன். அதனை பாதுகாப்பாக ஊருக்கு கொண்டு செல்வது குறித்து உடன் வேலை பார்ப்பவர் மற்றும் எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னை அழைத்து சென்றால் பணம் கிடைக்கும் என்பதால் அவர்களுக்குள் மோதி கொண்டனர்" என்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story