சிமெண்டு சிலாப் உடைந்து விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலி
திட்டக்குடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சிமெண்டு சிலாப் உடைந்து விழுந்ததில் 10-ம் வகுப்பு மாணவி பலியானார். கோவில் கும்பாபிஷேக விழாவை காண வந்த இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திட்டக்குடி
சிமெண்டு சிலாப் உடைந்து...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் சுதந்திரதேவி (வயது 15). இவர், தென்னூரில் உள்ள லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவரது பாட்டி ஊரான திட்டக்குடி அருகே மருதூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவை காண்பதற்காக சுதந்திரதேவி வந்திருந்தார்.
காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் முடிந்ததும் சுதந்திரதேவி அங்கிருந்து தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
மாணவி பலி
அப்போது மருதூர் ஊராட்சி மன்ற அலுவலக வாசல் மேற்பகுதியில் இருந்த சிமெண்டு சிலாப் உடைந்து மாணவியின் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சுதந்திரதேவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
ரூ.2 லட்சம் நிவாரண நிதி
இந்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிமெண்டு சிலாப் உடைந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி சுதந்திரதேவி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.
உயிரிழந்த சுதந்திரதேவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.