டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி


டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:21 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே தாய்மாமனுடன் உழவுக்கு சென்றபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 5-ம் வகுப்பு மாணவன் பலியானார்.

கடலூர்

திட்டக்குடி:

திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மகள் ரேகா(வயது 34). இவருக்கும், அரியலூர் மாவட்டம் கூடலூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் பழனிவேல்(43) என்பருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வரதராஜன்(10) என்ற மகன் இருந்தான். பழனிவேல், பக்ரைனில் வேலை பார்த்து வருகிறார். எனவே ரேகா, பெருமுளை கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். மாணவன் வரதராஜன், திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலி

இந்த நிலையில் மாணவனின் தாய்மாமா மணிகண்டன்(28) என்பவர் புதிய டிராக்டர் வாங்கியுள்ளார். அதனை மணிகண்டனின் உறவினரான அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் மணிகண்டன் வயலில் கோடை உழவு செய்ய டிராக்டரை ஓட்டிச் சென்றார்.

அதே டிராக்டரில் மணிகண்டனும், வரதராஜனும் அமர்ந்திருந்தனர். வயல் வரப்பில் டிராக்டர் ஏறியபோது வரதராஜன் தவறி கீழே விழுந்தான். அவனது தலையில் டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவிடத்திலேயே வரதராஜன் பலியானான். இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story