பள்ளியில் விஷபூச்சி கடித்து 8-ம் வகுப்பு மாணவன் சாவு


கொட்டாம்பட்டி அருகே விஷ பூச்சி கடித்து 8-ம் வகுப்பு மாணவன் இறந்தார். அவனது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

மதுரை

கொட்டாம்பட்டி,


கொட்டாம்பட்டி அருகே விஷ பூச்சி கடித்து 8-ம் வகுப்பு மாணவன் இறந்தார். அவனது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

விஷ பூச்சி கடித்தது

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள பூமங்களப்பட்டியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவருடைய மனைவி சுமங்கலி. இவர்களது மகன் நிதிஷ்(வயது 13). இவன் வலைச்சேரிபட்டி நான்கு வழிச்சாலை அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் நிதிஷின் சகோதரி அபியா படித்து வருகிறாள்.

இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி பள்ளி வளாகத்தில் இருந்த தார்பாய் அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது ஒரு விஷ பூச்சி நிதிஷை கடித்து உள்ளது. இதனால் அலறி துடித்த மாணவருக்கு முதலுதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. பெற்றோரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. மாலையில் வழக்கம் போல மாணவனை வீட்டிற்கு அழைத்து வர அவனது சித்தப்பா சென்றார். அப்ேபாது, அவரிடம், நிதிஷை ஏதோ ஒரு பூச்சி கடித்து உள்ளது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மாணவன் சாவு

இதையடுத்து சித்தப்பா, நிதிஷை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிதிஷ் ரத்த வாந்தி எடுத்தான். இதனால் பயந்து போன அவர் உடனே மாணவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவன் நிதிஷ் சேர்க்கப்பட்டான். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு நேற்று முன்தினம் மாணவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டான். வீட்டுக்கு வந்த இடத்தில் திடீரென்று மாணவன் பரிதாபமாக இறந்தான்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதையறிந்ததும் அவனது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாணவனின் சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நிதிஷின் உறவினர்கள் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துணை சூப்பிரண்டு பிரபாகரன், கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே மாணவனுக்கு பல்ஸ் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவனை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உறவினர்கள் போராட்டம்

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து மாணவரின் உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவனின் சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து போலீசாரும், வருவாய்த்துறையினரும் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் மாணவனின் உடலை பெற்றோர் பெற்று கொண்டனர்.

பள்ளிக்கு படிக்க சென்ற இடத்தில் விஷ பூச்சி கடித்து மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story