கிணற்றுக்குள் தவறி விழுந்து 8-ம் வகுப்பு மாணவி பலி
நச்சலூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து 8-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார். அவளது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
கிணற்றில் மூழ்கிய மாணவி
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ஜெயசக்தி. இந்த தம்பதியின் மகள் பிருந்தா (வயது 13). இவள் அதே பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு பிருந்தா சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார்.
பின்னர் மாலை 4.30 மணியளவில் பிருந்தா தனது பெரியம்மாவுடன் வீட்டிற்கு அருகே உள்ள 60 அடி ஆழம் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளாள். அப்போது கால் தவறி பிருந்தா கிணற்றுக்குள் தவறி விழுந்து மூழ்கினார். இதனால் பதற்றம் அடைந்த அவரது பெரியம்மா காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபாய குரல் எழுப்பினர்.
3 மணி நேரம் போராடி..
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் சிலர் கிணற்றில் இறங்கி பிருந்தவாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கும், குளித்தலை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பிருந்தாவை தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மின் மோட்டார் மூலம் வெளியேற்றினர். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் போராடி இரவு 7.30 மணி அளவில் பிருந்தாவின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பெற்றோர் கதறல்
இதையடுத்து பிருந்தாவின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சை கரைய வைப்பதுபோல் இருந்தது. இதையடுத்து போலீசார் பிருந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.