எம்.செட்டிஅள்ளி தொடக்கப்பள்ளியில் 3 ஆண்டுகளாக முடிக்கப்படாத வகுப்பறை கட்டுமான பணி-இட பற்றாக்குறையால் மாணவ-மாணவிகள் அவதி


எம்.செட்டிஅள்ளி தொடக்கப்பள்ளியில் 3 ஆண்டுகளாக முடிக்கப்படாத வகுப்பறை கட்டுமான பணி-இட பற்றாக்குறையால் மாணவ-மாணவிகள் அவதி
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மாரண்டஅள்ளி:

எம்.செட்டிஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி 3 ஆண்டுகள் ஆகியும் முடிக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இட பற்றாக்குறையால் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

கூடுதல் வகுப்பறை கட்டிடம்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டிஅள்ளி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிப்பதற்கு வசதியாக எம்.செட்டிஅள்ளியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான வகுப்பறை இட வசதி போதிய அளவில் இல்லாமல் இருந்தது. இதனால் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். வகுப்பறைகளில் போதிய இட வசதியை ஏற்படுத்த கூடுதல் கட்டிடத்தை கட்ட வேண்டும். அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இயல்பான கற்றல் மற்றும் கற்பித்தல் சூழலை உருவாக்க வேண்டும் என்று சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.

இடையில் நிறுத்தம்

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த தொடக்கப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. புதிய வகுப்பறை கட்டிடங்களின் 80 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இடையில் நிறுத்தப்பட்டது. இந்த பணியை விரைவாக முடித்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

ஏழை குடும்பங்கள்

எம்.செட்டிஅள்ளியை சேர்ந்த தையல் தொழிலாளி மாரியப்பன்:-

எம்.செட்டிஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள் போதிய இட வசதியுடன் இல்லாததால், கூடுதல் கட்டிடத்தை கட்டி மாணவ, மாணவிகளுக்கு தேவையான இட வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இந்த பணி இதுவரை முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளின் பிரச்சினை தொடர்கிறது. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வகுப்பறைக்கு வெளியே பாடம்

விவசாயி மூர்த்தி:-

எனது சகோதரரின் குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள். வகுப்பறைகளில் போதிய இட வசதி இல்லாததால் பல சமயங்களில் வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் இவ்வாறு மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்த முடிவதில்லை. இட பற்றாக்குறை காரணமாக கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். இதை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தில் மீதமுள்ள பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கற்றல் சூழல் பாதிப்பு

சமூக ஆர்வலர் கார்த்திக்:-

எம்.செட்டிஅள்ளி அரசு தொடக்கப்பள்ளியில் வகுப்பறை இட பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிட பணி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முழுமையாக முடிக்கப்படவில்லை. இது இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் கற்றல் சூழலை பாதித்துள்ளது. எனவே இந்த கூடுதல் வகுப்பறை கட்டிட பணியை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை பெற்று இந்த பணியை முடிக்க வேண்டும். இதன் மூலம் மாணவ-மாணவிகளின் கற்றல் தரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story