ஆபாச வீடியோவை காட்டி 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
ஆபாச வீடியோவை காட்டி 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
துடியலூர்
ஆபாச வீடியோவை காட்டி 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மாணவியின் உறவினரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை
கோவை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா காலகட்டத்தில் அந்த மாணவி அந்த பகுதியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அங்கு வசித்து வந்த மாணவியின் உறவினரான கூலித்தொழிலாளி திருஞானம் (வயது 42) என்பவர் மாணவிக்கு ஆபாச வீடியோக்களை அடிக்கடி காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மாணவி வார விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்கு செல்லும்போதும் தொடர்ந்து அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
வழக்குப்பதிவு
இதனை மாணவி யாரிட மும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம், துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் அந்த பள்ளியில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலும் யாராவது பாலியல் தொல்லை கொடுத்தால் தெரிவிக்கும்படி கூறினர். அப்போது அந்த மாணவி அவருக்கு அவரது உறவினர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தற்கொலை முயற்சி
இதற்கிடையில் அந்த மாணவியை, உறவினர்கள் புகார் கொடுக்க கூடாது என்று மிரட்டி உள்ளனர். இதனால் அந்த மாணவி பயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவல்அறிந்த மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவிக்கு உறவினர் திருஞானம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் திருஞானத்தை போக்சோவில் கைது செய்தனர்.