ரூ.88 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்கள்


ரூ.88 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்கள்
x

நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில், ரூ.88 லட்சத்தில் வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் நினைவு திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சத்தில் 4 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி முன்னிலை வகித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார்.

விழாவில் அவர் பேசுகையில், மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் வேலை தேடுபவராக இல்லாமல், வேலை கொடுப்பவராக இருக்க வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டது தான் நான் முதல்வன் திட்டம். இதன் மூலம் இந்த கல்லூரியை சேர்ந்த 766 மாணவிகள் பயனடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 2 கல்லூரிகள் உள்பட தமிழகம் முழுவதும் 23 கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார். விழாவில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., உயர் கல்வித்துறை இயக்குனர் கீதா, மதுரை மண்டல இணை இயக்குனர் பொன். முத்துராமலிங்கம், அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, ஒன்றிய பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் டாக்டர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story