தூய்மை இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம்
திண்டுக்கல்லில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
திண்டுக்கல் சர்வேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முகாம் அலுவலகம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி மேயர் இளமதி ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர். 10, 14, 17 வயதுக்கு உட்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்றனர். 1.5 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர் என வயது அடிப்படையில் அவர்களுக்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவ-மாணவிகள் 150-க் கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர். ரவுண்டு ரோடு பகுதியில் இருந்து ஓடத்தொடங்கிய மாணவ-மாணவிகள் பஸ் நிலையம், கிழக்கு ரதவீதி, சத்திரம் தெரு, சிலுவத்தூர் சாலை வழியாக மீண்டும் ரவுண்டு ரோட்டுக்கு வந்து நிறைவு செய்தனர். இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1,000 பரிசாக வழங்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஹலோ கிட்ஸ் பள்ளி தாளாளர் தாமரை ஜெயக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, வடமலையான் மருத்துவமனை டாக்டர் சரணியன், சர்வேஷ் கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகி ராஜ்குமார், சர்வேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் துணை தலைவர் செந்தில், மாவட்ட தடகள கழக பொருளாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.