குப்பைகள் தேங்குவதை தடுக்க வேண்டும்
சீர்காழியில் குப்பைகள் தேங்குவதை தடுக்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழியில் குப்பைகள் தேங்குவதை தடுக்க வேண்டும் என கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலைய வளாகம் மற்றும் பொது கழிவறை கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் கடந்த வாரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புதிய பஸ் நிலைய வளாகத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளையும், முறையாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்த கழிவறையையும் உடனடியாக சீரமைக்க வேண்டுமென நகராட்சி ஆணையர் வாசுதேவனுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு சேதம் அடைந்த நிலையில் உள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி மீண்டும் புதிய பஸ் நிலைய வளாகத்தில் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
தூய்மை பணியாளருக்கு வாழ்த்து
தொடர்ந்து பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கழிவறை கட்டிடத்தை தூய்மையாக வைத்துக் கொண்ட பெண் தூய்மை பணியாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் சட்டநாதர்கோவில் கீழ வீதி, சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பைகள் தரம் பிரித்து குப்பைகளை பதப்படுத்தி உரம் தயாரிக்கும் இடங்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து பொதுமக்களிடம் குறை கேட்டறிந்தார். அப்போது சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சாலைகளில் குப்பைகள் தேங்குவதை தடுக்கும் வகையில் தினசரி குப்பை அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், நகராட்சி ஆணையர் வாசுதேவன், சுகாதார அலுவலர் ராம்குமார் செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.